என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 24 April 2012

ஸீரோ டிகிரி குறித்து இந்திரா பார்த்தசாரதி


சாருவின் ஏதோ ஒரு புத்தகத்தின் பின்னுரையில் சாருவை பற்றி இப்படி எழுதி இருந்தார்கள் "சாருவின் இலக்கியத்தை ஒருவர் விரும்பலாம் அல்லது வெறுக்கலாம் ஆனால் நிராகரிக்க முடியாது". உண்மைதான்! தமிழ் இலக்கியத்தில் சாருவை யாராலும் எளிதில் நிராகரிக்க முடியாது.. சாருவை நிராகரித்துவிட்டு தமிழ் இலக்கியத்தை பார்ப்பது என்பது, திருமணம் முடிந்த உடன் கணவனை நாடுகடத்தி விட்டு, கணவனின் துன்புறுத்தல் இல்லாமல் மனைவி சந்தோசமாக இருக்கிறாள்" என்று சொல்வது  போலாகும். உலக தரத்தில் உள்ள ஒரு இலக்கியவாதியை தவிர்த்து விட்டு, அந்த மொழியின் இலக்கியத்தை விமர்சிக்க முடியாது.... நான் படித்த சாருவின் முதல் நாவல் "ஸீரோ டிகிரி", அதன் பிறகு "கோணல் பக்கங்கள்". நீண்ட நாட்கள் கழித்துதான் தெரியும் "ஸீரோ டிகிரி", The New modern Asian Classics என்ற சப்ஜெக்ட்க்கு "Text Book" என்பது. (சாருவின் வாசகர்கள் எத்தனை பேருக்கு இந்த விசியம் தெரியும் என்பது தெரியவில்லை).....

இன்று சாருவின் வலைமனையை பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஸீரோ டிகிரி பற்றி இந்திரா பார்த்தசாரதி எழுதிய கட்டுரையை படிக்க நேர்ந்தது, அட்டகாசமான கட்டுரை. அந்த கட்டுரையை படித்த பொழுது, மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி விட்டது  "சாருவின் இலக்கியத்தை ஒருவர் விரும்பலாம் அல்லது வெறுக்கலாம் ஆனால் நிராகரிக்க முடியாது"....
"சமஸ்கிருதத்தில் ‘ஜுகுப்ஸம்’ என்ற ஒரு ரஸம் கூறப்படுகிறது. தமிழில் இது ‘இளிவரல்’ என்று சிலர் சொன்னாலும், ஜுகுப்ஸம் இளிவரல் ஆகாது. ஜுகுப்ஸம் என்றால், நாடகத்தைப் பார்க்கின்றவர்களையோ, அல்லது இலக்கியத்தைப் படிக்கின்றவர்களையோ இனம் புரியாத ஒரு மனச்சங்கடத்துகுள்ளாக்கி அருவருப்பு உண்டான நிலையில் அதிர்ச்சியடையச் செய்தல். ஜுகுப்ஸ ரஸத்தின் விளைவாக ஏற்படும் உணர்வு பீபத்ஸம். அதாவது அதிர்ச்சி (Horror)
‘இளிவரலு’க்குப் பல சான்றுகள் தமிழ் இலக்கியத்தில் காண முடியும். ஆனால், ‘ஜுகுப்ஸ’ ரஸத்தை விளக்குவதற்கு உதாரணம் இதுவரை இல்லை. ‘௦ டிகிரி’ இந்த ரஸத்தை எடுத்துக்காட்டாக அமைகின்ற முதல் நூலாக இருக்கக் கூடும்.
சாரு நிவேதிதா திட்டமிட்டுத்தான் இந்நாவலை எழுதியிருக்கிறார். அவ்வகையில், அவர் தீர்மானித்துச் செய்திருப்பதில் வெற்றி அடைந்து விட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
அவர் இந்த நாவலை இப்படித்தான் எழுதியிருக்க வேண்டுமா? நியாயமான கேள்வி. நாவல் முழுவதுமே படைப்பாளியின் விஸ்வரூபம் தெரிவதோடு மட்டுமல்லாமல், அவர் எப்படி உருவாகியிருக்கிறார் என்பதும் புலபடுகின்றது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, அவர் இந்த நாவலை வேறுவிதமாக எழுதியிருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.
எனக்கு நிஜ சாரு நிவேதிதாவைப் பற்றி அதிகம் தெரியாது; படைப்பாளி சாரு நிவேதிதாவைத்தான் அவர் படைப்பின் மூலம் அறிகின்றேன்.
இதை நான் ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் அவரே இந்நாவலில் ஓரிடத்தில் கூறுகிறார்: ‘என் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், என் எழுத்தைப் பார்க்காதே. என் எழுத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், என் வாழ்க்கையைப் பார்க்காதே. என் எழுத்து வேறு. என் வாழ்க்கை வேறு.’ அவரால் இப்படித்தான் எழுதியிருக்க இயலுமென்று சொல்வது சரியான காரணமாக முடியுமா? படைப்பாளி என்ற வகையில் ஒருவர் எவ்வாறு உருவாகிறார் என்பதை அவருடைய ஆழ்மனச் சிந்தனையோட்டத்தின் வெளிப்பாடாக அவர் படைப்பை வாசிக்க முயல்வதின் மூலமாகத்தான் முடியும். சாரு நிவேதிதாவின் நாவலில், ஆழ்மனச் சலனங்கள் நேரடியாக முகமூடி ஏதுமின்றி எழுத்து வடிவம் கொள்வதால், படைப்பாளியாக அவரை அறிந்து கொள்ள முடிவது அவ்வளவு சிக்கலான பயிற்சி இல்லை என்றாலும், அவ்வெழுத்தின் நிர்வாணக் கோலம் பெரும்பான்மையோருக்கு அதிர்ச்சி தரும் என்பதில் ஆச்சரியமில்லை. ‘நிர்வாணம்’ என்றால் மனத்தடைகளினின்றும் விடுதலை பெற்ற நிலையைச் சொல்லுகிறேன்.
தமிழ் சமூகம் இன்றிருக்கும் நிலையில், சிந்திக்கும் எவரையும் மச்சிதைவு கொள்ளத்தான் செய்யும். இதனால் ஏற்படுகின்ற தார்மீகக் கோபத்தினால், ஒரு படைப்பாளி, சமூகத்தினின்றும் விலகி நின்று கடுமையாக விமர்சனம் செய்யலாம்; கோப உணர்வு அங்கதமாக வெளிப்படலாம்; இந்தக் கலாச்சாரத்தை அடியோடு நிராகரித்து எதிர்கலச்சாரத்தை மாற்றாக முன் நிறுத்தி, இதுதான் இதற்கு தீர்வு என்பது போல் வலியுறுத்தலாம். ஆனால், இந்த நாவலில், கலாச்சாரம் எதிர்க் கலாச்சாரம் எல்லாமே கிண்டலுக்குள்ளாகின்றன. ஏனென்றால், எதிர்கலச்சாரம் ஸ்தாபனமாக இறுகிப் போய்விடக் கூடிய ஆபத்து இருக்கின்றது. அப்பொழுது, எதிர்க் கலாச்சாரத்தை எதிர்க்க ஒரு எதிர் எதிர் கலாச்சாரம் உருவாகும். அந்த எதிர் எதிர்கலாச்சாரம், பழைய கலாச்சாரமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் வரலாற்றை வட்டமாகக் காணும் அறிஞர்கள்.
இந்த நாவலில் ஓரிடத்தில் வருகிறது; ‘உண்மையில் பார்த்தால், எந்த சமூக மதிப்பீடுகளை அவன் (எதிர்க்கலாச்சாரவாதி) மறுக்கிறானோ அதே சமூக மதிபீடுகளைத்தான் அவன் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். சமூக மதிப்பீடுகளை மறுப்பதை காண்பித்துக் கொள்வதின் மூலம் அவன் தன இருப்பை ஸ்தாபிக்க முயல்கிறான். ஆனால், சமூக மதிப்பீடுகளை ஏற்பதோ, மறுப்பதோ எல்லாம் அவற்றைப் பிரதானப்படுத்தத் தானே செய்கிறது. அவன் பேசும் எதிர்க்கலாச்சாரத்தையும், கலாச்சாரம் உபகலாச்சாரமாக உள்வாங்கிக் கொண்டு விடுகிறது.’
எதிர்காலாச்சாரம் என்றால் என்னவென்று வரையறுத்துக் காட்டுவது போல், பாலியல் வக்கிரம், பாலியல் வன்முறை போன்ற விஷயங்கள் மிக இயல்பாக இந்நாவலில் சொல்லப்படுகின்றன. இந்நாவலைப் படிக்கப் போகின்ற சிறுபான்மை வசகர்களிலே பெரும்பான்மையோருக்கு இவ்விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடுமென்றாலும், இவ்விஷயங்கள் சொல்லப்படும் விதத்தில், இவைதான் இயல்பானவை, (Normal) இவற்றுக்கு மாறுபட்டவை அனைத்தும் இயல்பானவை அல்ல (abnormal) என்ற கருத்து தோன்றலாம். ‘Show me a normal man; I shall cure him’ என்று யுங் (Jung) கூறியது நினைவுக்கு வருகிறது.
ஆனால், உலகில் காணும் நியாயமின்மையே அவரை இப்படி எழுத வைத்திருக்கிறது என்பது போல், அவர் ஒப்புக் கொள்கிறார்.  ’இந்த உலகில் நியாயம் எங்கே இருக்கிறது? ஒழுங்கு எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வியில் ஆதங்கம் தொனிக்கிறதேயன்றி, ஆதரவு புலப்படவில்லை. இன்னோரிடத்தில் வருகிறது: ‘கோபம், வெறுப்பு, கிண்டல் போன்றவற்றை வெளிப்படுத்த எந்தக் கூச்சமும் எழாத போது, அன்பை வெளிப்படுத்த நினைக்கும் போது மட்டும் வெட்கம் பிடுங்கி தின்கிறது. ஒருவேளை அன்புதான் மிகப்பெரிய மவுனம் போலும்.’ இயல்பானவற்றை இயல்பாக சொல்ல முடியும் பொழுது, இயல்பான உணர்வைச் சொல்ல இயலாமையின் ஏக்கத்தை இங்கு காண முடிகிறது.
இந்த நாவலில் பல ஆண் கதாபாத்திரங்கள் பல பெயர்களில் வந்தாலும், அடிப்படையில் இருப்பது ஓர் ஆண்தான். சாரு நிவேதிதா, முனியாண்டி, சூர்யா, மிஸ்ரா, அரவிந்தன், திவாகர் ஆகிய எல்லோருமே ஒரே ஆணின் பல்வேறு முகங்கள். அதே மாதிரி தான் பெண் கதாபாத்திரங்களும் – ஆர்த்தி, நளினி, தீப்தி, நீனா, அவந்திகா, நேநோ, கவிதா ஆகிய அனைவரும் ஒரே பெண்ணின் பல்வேறு முகங்கள்.
ஒர் ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் ஓயாமல் தேடியலைந்து, கண்டு, இணைந்து, அலுப்பு சலிப்பிலாமல் செக்ஸ்யுவல் ரக்பி வார்த்தைக்களத்தில் ஆடி, களைத்து, பிரிந்து, வெவ்வேறு பெயர்களுடன் மீண்டும் ஆடி, களைத்து, பிரிந்து…. இதன் பெயரா வாழ்க்கை? – கதையைச் சொல்லும் விதத்துக்கு அப்பாற்பட்ட ஒரு தத்துவப் பெருவெளியைத் தரிசிக்கும் முயற்சியில் ஆசிரியர் ஈடுபடுவது போல் தெரிகிறது, எல்லாமே ஒரு பொருள் தன்னைத் தானே அடையாளம் கண்டு கொள்ளும் முயற்சியா? ‘நியூட்ரான் தன்னை ந்யூட்ரானாக உணர்ந்தால் பெருவெடிப்பு நிகழும்’ என்பது போல் தன்னைத் தானே ஒருவரால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்து விட்டால் என்ன நிகழும்? இம்முயற்சியை நோக்கி முன்னேறுவது தான் வாழ்க்கை, முயற்சி வெற்றி பெற வேண்டுமென்ற அவசியமும் இல்லை.
ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் நாடி, இணைந்து, ஆடி, பிரிந்து, மீண்டும் நாடி…. இப்படித் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதே அவர்களுடைய வெகுமதி, தண்டனை.
இதைச் சொல்லும் விதத்தில் தான், சாரு நிவேதிதா இந்த நாவலைப் படிக்கின்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி, ஜுகுப்ஸ ரசம்தான் இந்நாவலின் அடி நாதம் என்று சொல்வது போல் தோன்றுகிறது.
இப்படி அவர் தருகின்ற அதிர்ச்சியில் ஓர் ஆபத்து உண்டு என்பt அவர் உணர வேண்டும். இந்நாவலில் வருகின்ற பல அற்புதமான பகுதிகள் உரிய கவனம் பெறாமல், அதிர்ச்சிகள் நாவலின் கோட்பாடுகளாக (Digressions) ஆகிவிடக் கூடிய ஆபத்து. ‘௦ டிகிரி’ என்பது இந்நாவலின் தலைப்பாக இருந்தாலும் இதில் வருகின்ற கதை மாந்தர்கள் அனைவரும் ஒரு வகையான ‘டென்ஷனில்’, 90 டிகிரி’ யில் இருக்கமுண்டு, செங்குத்தான நிலையில் இருப்பதினின்றும் தவிர்க்க முடியாதவர்கள் போல் இருக்கிறார்கள். நாவல் சொல்ல விரும்புவது, இதை தாண்டிய நிலைதான் என்று நான் நினைக்கிறேன்.
தாந்தேக்கு உள்ள பியாட்ரிஸ் போல், இக்கதாசிரியருக்கு ஜெனஸிஸ் இருக்கிறாள். அவளுக்கு எழுதப்படுகின்ற கடிதங்கள் இலக்கிய உன்னதங்கள், பாலியல் வக்கிரம், பாலியல் வன்முறை ஆகியவற்றை எல்லாம் தாண்டி நிற்கும், பூனைக்குட்டிகளை நேசிக்கும் ஓர் அற்புத உலகம். வாழ்வின் அத்தனை வார்த்தைகளையும் தள்ளி விட்டு, ‘மண்டியிட்டு ஒரு குழந்தையை நேசிக்கத்’ துடிக்கும் அன்பின் மௌனம்.
படைப்பாளியின் தத்துவார்த்த குழப்பம் (Philosophical Dilemma) புரிகிறது. நிஜ வாழ்க்கை வேறாக இருக்க, பண்பாட்டுப் போர்வையில் மதிப்பீட்டு பதிவிரதா தர்மம் காக்கும், தமிழ்ச் சமூகத்தின் இரட்டை வேஷத்தை கலைக்க, எதிர்க்கலாச்சாரத்தை ஒரு கருவியாக அவர் பயன்படுத்த தயங்கவில்லை என்றாலும், ஆதார நிலையில் அவர் ஒரு Moralist தான் என்ற உண்மையினின்றும் அவரால் தப்ப முடியவில்லை. இவர் ஒரே சமயத்தில் டாக்டர் ஜெகிலாகவும், டாக்டர் ஹைடாகவும் இருக்க முயல்வதுதான் இவருடைய Tragedy.
ஒரு சான்று
‘பூனைக் குட்டிகளை யாரவது வெறுக்க முடியுமா என்ன? கறுப்புப் பூனைக்குட்டி, வெள்ளைப் பூனைக் குட்டி, பழுப்புப் பூனைக்குட்டி, பூனைக் குட்டிகளை நான் ஆராதிக்கின்றேன், அவைகளை முத்தமிடுகின்றேன்..’
அழகான, ஆரோக்கியமான வழிபாடுதான், ஆனால், அவர் இறுதி வரியில் சொல்வது தான் முதலில் சொன்னவை அனைத்தும் நிராகரிக்கின்றது.
‘பூனைகள் ருசியானவை.’
இதை எதற்க்காகச சொல்ல வேண்டும்? தன்னை மிஸ்டர் ஹைட்என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொள்ள, இப்படிப் பல உதாரணங்களை இந்நாவலில் காண முடிகின்றது.
இறுதியாக, இதை நாவல் என்று சொல்ல இயலுமா? Proust இன் ‘Remembrance of Things Past’ ஐ நாவல் என்று சொல்லுகிறார்கள். படைப்புணர்வுடன், நிகழ்ச்சித் தொடர்ச்சி இல்லாவிட்டாலும், சிந்தனை ஓட்டத்தின் ஒருமைப்பாடு இருந்தால் அதை நாவல் என்று கூறுவதில் தவறில்லை என்று தான் எனக்குப்படுகின்றது. இந்நாவல் Puzzle விளையாட்டில் குவிந்து கிடக்கும் அட்டைதுண்டுகள் போல், செய்திகள் இரைந்து கிடக்கின்றன.
இவற்றுக்கு ஓர் உருவம் தர முயல்வது தான் வாசகரின் கடமை. இம் முயற்சியில் வாசகர் தோற்றாலும் இது அவருடைய அல்லது படைப்பாளியினுடைய தோல்வி என்று சொல்ல முடியாது."

நன்றி : charuonline.com

No comments:

Post a Comment